Thursday 10 March 2016

பங்குனி உத்திரம் மகிமை

பங்குனி உத்திரம்.
திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது
என்பது எல்லோரும் சொல்லும்
பொதுவான
சொல்தான். ஆனால் தன்
பிள்ளைகளுக்கு திருமணம் எப்போது நடக்கும்
என்ற ஆதங்கம் பெற்றோருக்கு
கவலையாகவே மாறிவிடுகிறது. அதிக
திருமண நிகழ்ச்சிகளை பார்த்தால் திருமண
யோகம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.
இப்படி மானிடர்களின் திருமணத்தை
பார்த்தாலே யோகம் என்றால்,
தெய்வத்தின் திருமண கோலத்தை
பார்த்தால் எத்தனையோ ஆனந்தங்கள்
அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழும்.
அத்துடன் திருமணம் நடக்காதவர்களுக்கு
விரைவில் திருமண தடை அகலும்.
மணவாழ்க்கையில் பிரச்சனை இருந்தாலோ
அல்லது பிரிந்த கணவனோ – மனைவியோ
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம்,
பௌர்ணமியும் சேரும் பங்குனி உத்திரம் என்று
அழைக்கும் இந்த நன்நாளில் இறைவனின்
ஆலயத்திற்கு சென்று வணங்கினால்
வாழ்க்கையில் நல்ல மாற்றமும், குடும்பம்
ஒன்று சேரும் காலமும் வரும்.
ஸ்ரீ நாராயணருக்கும் மகாலஷ்மிக்கும்
திருமணம் நடந்தது இந்த பங்குனி உத்திரம்
தினத்தில்தான். குபேரனிடம் கை நீட்டி கடன்
பெற்றவராக இருந்தாலும் அலைமகள்
மனைவியாக அமைந்த காரணத்தால்
பணக்கார கடவுளாகவே மாறிவிட்டார்.
நந்தி பகவான் திருமணம்
தன் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க பல
மெட்ரிமோனிகளுக்கு சென்று
விண்ணப்பிக்கும் காலம் இது. இந்த
காலம் போல் சிவபெருமான், தன்
பிள்ளையாக நினைக்கும் நந்தி தேவருக்கு
திருமணம் செய்ய தேவர்களை அழைத்து
பெண் பார்க்க
சொன்னார். “வரம்
கொடுக்கும் ஈசனாலேயே தன்
மகனுக்கு பெண் பார்க்க
முடியாவிட்டால் நாங்கள் தேடினால்
எப்படி கிடைக்கும்.?“ என்று தேவர்களுக்கு
சந்தேகம் ஏற்பட்டது.
“அய்யனே.. தாங்களே உலகத்தை படைத்தீர்கள்.
உங்களுக்கு தெரியாதா யார்
யாருக்கு எவருடன் வாழ்க்கை அமையும்
என்று.?“ கேட்டார் இந்திரன்.
“மகனை திருமண கோலத்தில் பார்ப்பதற்காக
ஒரு நல்ல பெண்ணை மருமகளாக
தேடுவது பெற்றோரின் கடமை. உலகத்தை
காப்பவனாக இருந்தாலும் என்
புத்திரனுக்கு திருமணம் செய்ய உங்கள்
ஆதரவு வேண்டும். நீங்கள்தான் நந்தியின்
திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்”.
என்றார் சிவபெருமான்.
“யாரிடம் பெண் கேட்பது…?“ என்று
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து
கொண்டு இருக்கும் போது தேவந்திரன்,
“வேதாங்க முனிவரின் மகளை கேட்டு
பார்க்கலாம்.“ என்று நினைத்து
நந்திக்காக பெண் கேட்டார்
முனிவரிடம். அவரும் அதை மகிழ்ச்சியுடன்
ஒப்புக்கொண்டார். தன் மகள்
ஸுகேசியை நந்திக்கு திருமணம் செய்து தர
சம்மதித்தார். பங்குனி உத்திரத்தில்தான்
நந்திக்கும் ஸுகேசிக்கும் திருமணம் இனிதே
நடந்தது. கல்யாண விரதத்தை
கடைபிடித்ததால் ஈசனுக்கு பிரியமான
நந்தியை திருமணம் செய்யும் பாக்கியம்
பெற்றாள் ஸுகேசி என்கிறது கந்த
புராணம்.
பங்குனி உத்திரத்தில் பிறந்தவர்
பங்குனி உத்திரத்தில்தான் ஐயப்பர்
பிறந்தார். அதனால் ஏராளமான
பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பார்கள்.
அதேபோல வில்லுக்கு விஜயன் என போற்றபடும்
அர்ஜுனனும் இந்த நன்நாளில்தான்
பிறந்தார்.
திருமண வரம் தரும் பங்குனி உத்திரத்தின்
மகிமை
கல்யாண விரதத்தின் பயனால் ரதிதேவி
மறுபடியும் மன்மதனை கணவனாக
அடைந்தாள். இதேபோல் சீதையும் இந்த விரதத்தை
கடைபிடித்தாள். அதன் பயனாக
ஸ்ரீராமரை மணந்தாள். முருகனுக்கும் –
தெய்வானைக்கும் திருமணம் நடந்ததும்
பங்குனி உத்திர நாளில்தான். அதேபோல
இந்திரனுக்கும், இந்திராணிக்கும்,
கற்பகம்பாளுக்கும் – கபாலீஸ்வரருக்கும்
இந்த தினத்தில்தான் திருமணம் நடந்தது.
ஆண்டாளுக்கும் இந்த தினத்தில்தான்
திருமணம் நடந்தது. சத்தியவான்
சாவித்திரிக்கும் இந்த தினத்தில்தான்
திருமணம் நடந்தது. பிரம்மா –
சரஸ்வதிக்கும் திருமணம் நடந்தது இந்த
பங்குனி உத்திர திருநாளில்தான்.
முனிவராக இருந்தாலும் வாரிசு
இருந்தால்தான் புண்ணிய லோகம் அடைய
முடியும் என்ற எண்ணத்தில் அகஸ்திய
முனிவரும் கல்யாண விரதத்தை
அனுசரித்தார். அதன் பயனாக லோபா
முத்திரையை தன் மனைவியாக அடைந்தார்.
இப்படி எத்தனையோ பேர் பங்குனி உத்திர
விரதத்தை, அதாவது கல்யாண விரதத்தை
கடைபிடித்ததால் இனிமையாக திருமணம்
வாழ்க்கை அமைந்தது.
மகானாக பிறப்பார்கள்
நாற்பத்தி எட்டு ஆண்டுகள் பங்குனி உத்திர
விரதம் இருப்பவர்கள் மறுபிறவியில் உலகமே
வணங்கும் தெய்வதன்மை
கொண்ட மகானாக
பிறப்பார்கள்.
முருகனுக்கு விசேஷம்
முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து
கால்நடையாகக் காவடி எடுத்து பழனி
போன்ற ஆலயங்களுக்கு செல்வார்கள்
பக்தர்கள்.
பல ஆலயங்களில் இறைவனுக்கு தீர்த்தவாரி
உற்சவம் நடக்கும். அப்போது இறைவனோடு
நீராடினால் பாவங்கள், தோஷங்கள்
நீங்கி புண்ணியம் கிட்டும்.
திருமணம் ஆகாதவர்கள் பங்குனி உத்திரம்
அன்று, தங்களின் திருமணம் விரைவில் நடக்க
வேண்டும் என்று மனதால் நினைத்து ஒரு
வேலையாவது உண்ணாமல் விரதம் இருந்து
திருக்கோயிலுக்கு சென்று இறைவனை
தரிசித்தால் மகிழ்ச்சியான இல்லற
வாழ்க்கை அமையும்.

No comments:

Post a Comment