Monday 30 November 2015

வைத்தீஸ்வரன் கோவில்

இத்திருக்கோவிலில்
உறையும் இறைவனின் திருநாமம் வைத்தீஸ்வரர்
என்பதாகும். வைத்தியநாதன், புள்ளிருக்கு
வேளூரான் என்னும் பிற பெயர்களும்
இறைவனுக்கு உண்டு. அம்பாள்
தையல்நாயகி ஆவாள்.
இப்புண்ணிய தலத்தில்தான் இறைவன்
முருகப்பெருமானுக்கு வேலாயுதம்
வழங்கியதாக கூறப்படுகிறது. ஐடாயுபுரி,
வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி என்னும் பிற
பெயர்களும் இத்திருத்தலத்திற்கு உண்டு.
இத்தலத்து உறையும் இறைவனான
வைத்தீஸ்வரன் மந்திரத்தால்,
தந்திரத்தால், மருந்துகளால் நீங்கிடாத
கொடிய நோய்களைத் தன்
பெயருக்கு ஏற்றாற்போல் போக்கிக்
குணமளித்திடுகிறார். அன்னை உமையவள் தம்
துணைவரான இறைவனுக்குத் துணையாகத்
தைலப்பாத்திரம் ஏந்தி உடனிருந்து பிணி
தீர்த்தமையால் தையல்நாயகி என்றும்,
தைலாம்பாள் என்னும் போற்றப்படுகின்
றாள்.
இத்தலத்தில் தன்வந்திரி பகவான்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருவது விசேஷ மாகும். இந்த புண்ணியத்
தலத்தில் தம் வலிமையை நவக்கிரகங்கள்
இழந்துவிடுகின்றன. மேலும் இத்தலம்
அங்காரகத் தலமும் ஆகும். இங்கு
அங்காரகனுக்குத் தனி சன்னதி
அமைந்துள்ளது சிறப்பாகும். சூரியனைத் தவிர
பிற கிரகங்கள் வழக்கமான பல திக்குகளைப்
பார்க்காது ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை
மாலை வேளையில் ஆட்டுக்கிடா வாகனம்
ஏறி அங்காரகன் ஆலயத்தின்
பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கும்,
அன்பர்களுக்கும் அருள்பாலிக்கின்றார்.
ராவணன் வஞ்சகமாக சீதாப்
பிராட்டியைக் கவர்ந்து சென்றபோது
அவனை ஜடாயு எதிர்த்து சண்டையிட்டது.
அப்போது ராவணன் ஜடாயுவின்
சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். இதன்
காரணமாக உயிர் நீத்த ஜடாயுவின்
அந்திமச் சடங்குகளை ராமபிரான் இங்கு
சென்று முடித்தார். இதனால்
இக்குண்டம் ஜடாயு குண்டம்
எனப்படுகிறது. ஒவ்வொரு வருடமும்
பங்குனி மாதம் இத்திருத்தலத்தில்
பிரம்மோற்சவம் நடைபெறும்.
உற்சவத்தினுடைய 5-ம் நாள் அன்று
செல்வமுத்துக்குமாரசுவாமி
வைத்தீஸ்வரரை பூஜித்து வேலினைப் பெற்றிடும்
திருக்காட்சி வைபவம் தத்ரூபமாக
நடைபெறும்.
இத்திருக்கோவில் இறைவனின் சன்னிதியில்
திருச்சாந்து உருண்டை பெற்று
நோயாளிகள் உண்டால் அவர்களை வருத்தி
வந்த நோய்கள் நீங்கிக் குணம் பெறுவர்.
இவ்வாலயத்தில் நடைபெறும்
அர்த்தஜாமப் பூஜை வெகு விசேஷமான
ஒன்றாகும். முதலில் செல்வ
முத்துக்குமாரசுவாமிக்கு பூஜை
நடைபெறும். அடுத்து இறைவனுக்கும்,
அம்பாளுக்கும் முறைப்படியான பூஜைகள்
நடைபெறும். அர்த்தஜாமப்
பூஜையின்போது செல்வ முத்துக்குமாரசு
வாமிக்கு சாற்றப்படும் நேத்திரப்படி
சந்தனப் பிரசாதம் மிகவும்
சிறப்புடையாதாகும்.
இது எண்ணிய காரியங்கள் அனைத்தையும்
ஜெயமுடன் முடித்து வைக்கும் மகிமையைக்
கொண்டது. இத்தலம் பற்றியப்
பாடலைப் பாட குமரகுருபரருக்கு
அடியெடுத்துக் கொடுத்தது
முத்துக்குமாரசுவாமி தான் எனவும்
கூறப்படுகிறது. இத்தலத்து சித்தாமிர்தத்
தீர்த்தத்தில் நீராடி முடித்து வைத்தீஸ்வரர்,
தையல் நாயகி, முத்துக்குமாரசுவாமி
ஆகியோரை பணிந்து பக்தியுடன் வழிபட்டால்
உடல் நோய் மட்டுமல்லாது மனத்துயரங்களும்
, பிறவித் துயரும் நீங்கும் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment