Monday 30 November 2015

திருவானைக்கா அம்பிகை

கோயிலில் அர்ச்சகர்கள் அவர்கள் நிலையில் பூஜை
செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால்,
அவரே சேலை அணிந்து, கிரீடம் தரித்து
பெண் தோற்றத்தில் சிவபூஜை
செய்வதைப் பார்த்திருப்போமா? இதைக்
காண நாம் திருஆனைக்கா செல்ல
வேண்டும்.
பஞ்ச பூதத் தலமாகவும் சக்தி
பீடமாகவும் திகழும் தலம் திருஆனைக்கா.
சக்தி பீட வரிசையில் வாராஹி பீடத்
தலமாக விளங்குகிறது. பூலோக
வைகுந்தமான திருவரங்கத்துக்கு அருகில்
காவிரிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்தத்
தலத்தில் அன்னை உலகைக் காக்கும்
ஈஸ்வரியாக அகிலாண்டேஸ்வரி என்ற
திருநாமத்துடன் கோயில்
கொண்டுள்ளார்.
இங்கே சிவபெருமான் ஜம்புகேஸ்வரர்
என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.
பஞ்ச பூதத் தலங்களில் நீர்த் தலமாக
விளங்கும் இந்தத் தலத்தில், ஈஸ்வரியே
லிங்கப் பெருமானை உண்டாக்கி
பூஜித்தாராம்.
"நீரின்றி அமையாது' உலகம் என்பர்.
அத்தகைய பெருமை வாய்ந்த நீரை
ஒன்றாக்கித் திரட்டி, லிங்கப் பிரதிஷ்டை
செய்து பூஜித்தார் அன்னை
அகிலாண்டேஸ்வரி. அமுதம் போன்ற நீரை
உமாதேவியார் திரட்டி லிங்கமாக்கி
பூஜித்ததால், பெருமானுக்கு
அமுதலிங்கம் என்று திருப் பெயர்.
ஜம்புகேஸ்வரர் என்றும் அழைப்பர். இங்கே
பெருமானின் கருவறையில் நீர் சுரந்து
கொண்டிருக்கிறது.
அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில்
ஜம்புகேஸ்வரரை உச்சிக் காலத்தில் பூஜை
செய்கிறாராம். எனவே மதிய வேளையில்
அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்,
அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும்
மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேள
தாளம் முழங்க சிவபெருமானின்
சந்நிதிக்குச் செல்வார்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்து,
கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள்
சந்நிதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே
நேரில் சென்று செய்வதாகக்
கூறுவர். எனவே, இந்நேரத்தில் அர்ச்சகரை
அம்பாளாகவே பாவித்து பக்தர்கள்
வணங்குவதைக் காணலாம்.
இங்கே ஆடி மாதத்தில்தான் அம்பாள்
சிவபெருமானை வேண்டி
தவமிருந்தாராம். எனவே, ஆடி
வெள்ளி இங்கே சிறப்பான திருவிழா.
அம்பாள் இங்கே மூன்று தேவியராகவும்
காட்சி தருவது சிறப்பான அம்சம்.
காலையில் லட்சுமியாகவும்,
உச்சிக்காலத்தில் பார்வதியாகவும்,
மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி
தருகிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி.
இந்தத் தலத்தில் சிவபெருமான்,
அம்பிகைக்கு குருவாக அமர்ந்து உபதேசம்
செய்தார் என்பர். எனவே, அம்பாளே
மாணவியாக இருந்து பெருமானிடம்
கற்றறிந்தார் என்பதால், மாணவர்கள்
தேர்வுக்கு முன்னர் அம்பாளிடம் மனமுருக
வேண்டிக் கொள்கிறார்கள்.
தேர்வு பயம் அகன்று, நல்ல மதிப்பெண்
பெற்று நல்ல மாணவனாக
விளங்க, அகிலாண்டேஸ்வரியின் அருளை
வேண்டுகின்றனர்.

No comments:

Post a Comment