Sunday 24 July 2016

கன்னிகாதானம்

வயிற்றுப்பசியைப் போக்குகின்ற
அன்னதானமே தானத்தில்
சிறந்தது என்று நடைமுறை
வாழ்வாகவும், தானத்தில்
சிறந்தது நிதானம்தான் என்று
தத்துவரீதியாகவும் நாம் வாதம்
செய்தாலும், இருக்கின்ற
தானங்களிலேயே மிகப்
பெரியதாக,
மகாதானமாக சாஸ்திரம்
குறிப்பிடுவது இந்த
கன்னிகாதானத்தைதான்.
திருமணம் செய்துவைக்கும்போது,
தந்தையானவர் தான் பெற்ற
பெண்ணை மற்றொரு
குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு
தானமாக அளித்து அவனிடம்
ஒப்படைக்கும் இந்த நிகழ்வினை
கன்யாதானம் அல்லது
கன்னிகாதானம் என்று
அழைக்கிறார்கள்.
இந்த உலகில் எத்தனையோவிதமான
தானங்கள்
செய்யப்பட்டாலும் அவை
எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த
கன்னிகாதானமே என்பதற்கு
இந்த நிகழ்வின்போது
சொல்லப்படுகின்ற
சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
“தசானாம்பூர்வேஷாம்,
தசானாம்பரேஷாம்,
மமஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல
உத்தாரண..” என்று அந்த மந்திரம்
நீள்கிறது.
அதாவது, கன்யாதானம்
செய்பவனுக்கு முன்னால்
உள்ள பத்து தலைமுறையும், பின்னால்
வருகின்ற பத்து தலைமுறையும்,
கன்யாதானம் செய்பவனது
தலைமுறையையும் சேர்த்து
ஆகமொத்தம் இருபத்தியோரு
தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக
இந்த கன்னிகாதானம் என்று
அழைக்கப்படுகின்ற
மகாதானத்தினை செய்து
கொடுக்கிறேன் என்பது இந்த
மந்திரத்தின் பொருள்.
யோசித்துப் பாருங்கள், எதை ஒன்றை
தானமாகத் தந்தாலும்
அதேபோன்றதொரு
பொருளை நம்மால் மீண்டும்
சம்பாதிக்க இயலும். ஆனால்,
கன்னிகாதானத்தில் அது
இயலுமா?
உனது வம்சவிருத்திக்காக எனது
குலவிளக்கினை உனக்கு தானமாக
அளிக்கிறேன் என்று ஒரு தந்தை
செய்யக்கூடிய
கன்னிகாதானமே உலகில்
அளிக்கப்படுகின்ற தானங்களில்
மிகப்பெரியது என்று சாஸ்திரம்
போற்றுகின்றது. இதன் மூலம் நாம்
தெரிந்து
கொள்ளவேண்டியது என்ன?
ஆண்பிள்ளையைப் பெற்றால்
அந்தப் பிள்ளை செய்கின்ற
கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை
மட்டுமே கரையேறும்; ஆனால்,
பெண்பிள்ளையைப் பெற்று,
அவளைக் கண்ணுக்குக் கண்ணாக
வளர்த்து, மற்றொருவனின்
வம்சவிருத்திக்காக அவளை தானம்
செய்து
கொடுப்பதால், அவனது
வம்சத்தில் இருபத்தியோரு தலைமுறைகளும்
கரையேறுகிறது என்றால்
பெண்பிள்ளையைப்
பெற்றவன் புண்ணியம்
செய்தவனாகத்தான்
இருக்கமுடியும் அல்லவா? ஆக,
பெண்பிள்ளையைப்
பெற்றவனைப் பார்த்து ஏளனம்
செய்வதை விடுத்து இருபத்தியோரு
தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பினைப்
பெற்ற இவன் எத்தனை
பெரிய பாக்கியசாலி என்று
போற்றவேண்டும் என்பதையே சாஸ்திரம்
நமக்கு உணர்த்துகிறது.

No comments:

Post a Comment